20151001
டெங்கு காய்ச்சல் தொடர்பான முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம் சார் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சார் ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தலைமையில் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சார் ஆட்சியர் பேசியதாவது:

மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கிராமங்களிலும் டெங்கு நோயை பரப்பக்கூடிய கொசுப்புழுக்களை கண்டறிந்து அவைகளை முழுவதும் அழிக்க தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை சார்ந்த அலுவலர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும்.

மேலும் சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்கால பணியாளர்கள் மூலம் கொசுப்புழு ஒழிப்பு மற்றும் புகைமருந்து அடிக்கும் பணிகளை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளை மூன்று நாட்களுக்கு ஒரு முறை பிளீச்சிங்பவுடர் கொண்டு கழுவி உலரவைத்து பின்னர் தண்ணீர் பிடிக்க வேண்டும். தண்ணீரை நன்றாக மூடிவைக்க வேண்டும். சரியான மூடி இல்லையெனில் துணியை கொண்டு வேடு கட்டி வைக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் கொசு தண்ணீரில் உட்கார்ந்து முட்டையிடாமல் தடுக்கமுடியும். பிளிச்சிங் பவுடர் கொண்டு தொட்டிகளை சுத்தம் செய்வதால், தொட்டிகளில் பாசத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் கொசுவின் முட்டைகள் அழிக்கப்படும். எனவே பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு, தங்கள் வீடு மற்றும் சுற்றப்புறங்களில் உள்ள பிளாஸ்டிக் கட்டிகள், உடைந்த மண்பானைகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மேலும், தங்கள் பகுதியில் யாருக்கேனும் காய்ச்சல் ஏற்ப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ, அல்லது, அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுக வேண்டும். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு நோய்க்கான பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.

மேலும், டெங்கு நோய்க்கான சிகிச்சை மற்றும் நிலவேம்புக் குடிநீர் ஆகியவையும் வழங்கப்படுகிறது. டெங்கு மற்றும் சிக்கன்குனியா சிகிச்சைக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு உட்கொள்வது மிகவும் நல்லது. மழைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, நோய்கள் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள, பொதுமக்கள் அனைவரும் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், என இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.கே.சி.சேரன், இணை இயக்குநர் மரு. உதயகுமார், நகராட்சி ஆணையர் முரளி, மாவட்ட மலேரியா அலுவலர் சுப்ரமணியன், உதவி இயக்குனர் ராஜேந்திரன், உதவி திட்ட மேலாளர் மரு.தினேஷ், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு மருத்துவர் மரு.அரவிந்தன், மாவட்ட பயிற்சி மருத்துவர் மரு.த.ராஜன், வட்டார மருத்துவ அலுவலர்கள், மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!