பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கதுரை-கீதா தம்பதியினர;, இவரது மகன்கள் தயாளன்(11), வினோத்குமார்(8). அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் பெற்றோருடன், பரவாய் கிராமத்தில் இன்று நடைபெற்ற தேர்த் திருவிழாவிற்காக உறவினர் ராமசாமி வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக தயாளனும், அவரது சகோதரர் வினோத்குமாரும் ஒதுங்கி உள்ளனர். அங்குள்ள ஏரிக்கரையில், கால் அலம்புவதற்காக சென்றுள்ளர். அப்போது எதிர்பாரா விதமாக நீரில் வினோத்குமார் தவறி நீரில் விழுந்துவிட்டார். இதனையறிந்த தயாளன தம்பியை காப்பாற்ற தண்ணீரில் குதித்தார். அப்போது இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனை அவ்வழியே சென்ற பொது மக்கள் கண்டுள்ளனர். உடனே, இரண்டு சிறுவர்களையும் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரியலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதில் பாதி வழியிலேயே ஒரு தயாளன் பரிதாபமாக உயிரிழந்தார், அவரது சகோதரர் வினோத்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து சிறுவன் தயாளனின் உடலை அவரது பெற்றோர்கள் குன்னத்திற்கு கொண்டு வந்து இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதுபற்றி தகவலறிந்த குன்னம் போலீசார் தங்கதுரை வீட்டிற்கு சென்று சிறுவனின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் திருவிழாவிற்காக உறவினர் வீட்டிற்கு சென்ற போது நிகழ்ந்த இந்த சம்பவம் சிறுவன் தயாளன் குடும்பத்தார் உட்பட அப்பகுதி பொது மக்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.