பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் நடைபெற்று முடிந்த 2014-&2015 ஏப்ரல் அரசு வாரிய தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் சேர்மன் சீனிவாசன் இன்று தெரிவித்ததாவது: தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி ஒவ்வொரு வருடமும் 100 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் சாதனை படைத்து வருகிறது.
மேலும், இக்கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் வேலை வாய்ப்பை
பெற்றுத்தந்து தமிழகத்தில் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.
சமீபத்தில் வெளிவந்த ஏப்ரல் 2015 அரசு வாரியத்தேர்வில் இக்கல்லூரியை சேர்ந்த 1159 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர். இதில் 73 தியரி பாடங்களில் 100சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்கல்லூரி 2ம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர் ஆர்.பிரகாஷ் 697/700 மதிப்பெண்களும், 3ம் ஆண்டு மெக்கானிக்கல் துறை மாணவர் வி.முகுந்தன் 695/700 மதிப்பெண்களும், 3ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் துறை மாணவர் கே.விக்னேஷ் 694/700 மதிப்பெண்களும், 2ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் துறை மாணவர் எம்.பூநாதன் 692/700 மதிப்பெண்களும், 3ம் ஆண்டு மெக்கானிக்கல் துறை மாணவர் எஸ்.தனஞ்ஜெயன் 690/700 மதிப்பெண்களும் பெற்று மாநில அளவிலான சாதனை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளனர்.
2014 – 2015ஆம் கல்வி ஆண்டில் 27 நிறுவனங்கள் கல்லூரி வளாகத்திற்கு வரவரழக்கப்பட்டு நடைபெற்ற வளாக நேர்முகத்தேர்வில் 415 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர் என்றார்.
இதனைத்தொடர்ந்து மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்த மாணவனுக்கு சேர்மன் சீனிவாசன் பரிசு வழங்கி பாராட்டி, அந்த மாணவனுக்கு ஒரு ஆண்டிற்கான கல்விக்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்தார்.
மேலும் மாணவர்கள் வெற்றிக்கு உழைத்திட்ட கல்லூரி முதல்வர் சுகுமார், துணை முதல்வர், துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரை பாராட்டி வாழ்த்தினார்.