தனியார் கல்லூரி வாகனத்தின் சான்றுகளை ஆய்வு செய்கிறார் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி. வட்டார போக்குவரத்து அலுவலர் த. அறிவழகன் ஆகியோர் உடனிருந்தனர்.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளுக்குள் உட்பட்டு இயக்குவதற்கு தகுதியற்ற தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சொந்தமான 13 வாகனங்களை இயக்க இன்று (சனிக்கிழமை) தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளை சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், தனியார் பள்ளி, கல்லூரிக்கு சொந்தமான வாகனங்களில் அவசரகால வெளியேறும் வழி, பள்ளி மாணவ, மாணவிகள் பாடப்புத்தக பையை வைக்க தனி வசதி, எளிதில் பேருந்தில் ஏறும் வகையில் படிக்கட்டின் உயரம், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.
இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 312 பள்ளி வாகனங்களில் 227 வாகனங்களில் மேற்கொண்ட சோதனையில் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றாத 13 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் தகுதிச்சான்று தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது, வட்டார போக்குவரத்து அலுவலர் த. அறிவழகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அ. பாபு, ரெ. பெரியசாமி உள்பட போக்குவரத்துத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.