பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே பள்ளி கான்கிரீட் கூரை சரிந்து விழுந்து மூவர் பலியான சம்பவத்தில் தனியார் பள்ளியின் தாளாளர் மீது வழக்குப் பதிந்து இறந்தவர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெங்கலம் கிராமம் தொண்டமாந்துறை பிரிவு சாலை அருகே அன்னை மெட்ரிக்குலேசன் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியை வெங்கலம் கிராமத்தை சேர்ந்த அய்யாக்கன்னு மகன் தங்கவேல்,50, என்பவர் நடத்தி வருகிறார். இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் கான்கிரீட் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கான்கிரீட் சரிந்து விழுந்ததில் சேலம் மாவட்டம், லத்துவாடி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகள் ப்ரியா,19, இதே கிராமத்தை சேர்ந்த நல்லுசாமி மனைவி காந்திமதி,40, தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்த மூக்கையன் மகன் கணேசன்,29, ஆகிய மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த அதே கிராமத்தை சேர்ந்த ராஜா மனைவி சித்ரா,37, பெரியசாமி மனைவி சந்திரா,35, ஆகியோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு பெரம்பலுõர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து வெங்கலம் வி.ஏ.ஓ., ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல், பள்ளியின் தாளாளர் தங்கவேல்,50, திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்த திவ்யநாதன் மகன் இன்ஜினியர் தினகரன்,45, மற்றும் சென்ட்ரிங் மேஸ்திரி ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றர்.

*சடலம் வாங்க மறுப்பு: இச்சம்பவத்தில் உயிரிழந்த பிரியா, காந்திமதி, கணேசன் ஆகியோரின் இறப்புக்கு காரணமான தனியார் பள்ளி தாளாளர் தங்கவேல் உட்பட சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் பிரியா, காந்திமதி, கணேசன் ஆகியோரின் குடும்பத்தினர் பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சடலத்தை வாங்க மறுத்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் பிரியா, காந்திமதி, கணேசன் ஆகியோரின் சடலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வருவாய்த்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், தொழிலாளர் நலத்துறையினர் ஆகியோரை கொண்ட குழுவினர் தொண்டமாந்துறை அன்னை மெட்ரிக்குலேசன் பள்ளியை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் திருச்சி மண்டல மெட்ரிக்குலேசன் ஆய்வாளர் வசந்தா தலைமையிலான கல்வி துறை அலுவலர்களும் பள்ளியை நேரில் பார்வையிட்டனர்.

ஆய்வின்போது அனுமதி பெறாமல் இக்கட்டிட பணிகள் நடந்து வந்தது தெரியவந்தது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!