பெரம்பலூர் : தனியார் பள்ளி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 15 மாணவர்கள் காயமடைந்தனர்.
பெரம்பலூர் தனியார் பள்ளி பேருந்து ஒன்று இன்று காலை 8.30 மணியளவில் கீழப்புலியூர் கிராமத்திலிருந்து சுமார் 60 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை கீழப்புலியூரை சேர்ந்த பொட்டுக்கண்ணன் மகன் சீனிவாசன் (28) என்பவர் ஓட்டினார்.
செங்குணம் பிரிவு ரோடு அருகே வந்தபோது அப்பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் வாகனங்களை சோதனையிட்டு கொண்டிருந்ததால் பள்ளி பேருந்து முன்னால் சென்ற லாரி ஒன்று திடீரென நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.
இதனால் தனியார் பள்ளி பஸ்சை டிரைவர் சீனிவாசன் நிறுத்துவதற்காக திடீரென நிறுத்தியதால் பேருந்தை தொடர்ந்து வந்த மற்றொரு லாரி பள்ளி பேருந்தின் பின்புறத்தில் மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த எழுமூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகள் ஜெயஸ்ரீ (16), கீழப்புலியூர் சிலோன் காலனி பகுதியை சேர்ந்த அறிவுதுரை மகன் சரக்குமார்,16, கே.புதூர் கிராமத்தை சேர்ந்த ராமராஜ் மகள் ராகவி,9, ஆகியோர் உட்பட 15 மாணவ, மாணவிகள் லேசான காயமடைந்தனர்.
இது குறித்து கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் லாரி டிரைவர் கபில்ராஜ்(24) என்பவரை கைது செய்து விசாரிக்கிறார்.