விவசாயிகளுக்கு தரமான விதைகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விதை விற்பனையாளர் விதைசட்ட நடைமுறைகளை பின்பற்றி விதை வணிகம் செய்வதுபற்றி திருச்சிராப்பள்ளி விதை ஆய்வுத்துறை சார்பாக பெரம்பலூர் மாவட்ட தனியார் விதை விற்பனையாளர்களுக்கு புத்தூட்டப்பயிற்சி இன்று பெரம்பலூர் வேளாண் இணை இயக்குநர் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் ஆறுமுகம் பயிற்சியினை துவக்கி வைத்து விதைகளின் முக்கியதுவம் பற்றி சிறப்புரையாற்றினார்கள்.

திருச்சிராப்பள்ளி,விதை ஆய்வு துணை இயக்குநர் முத்துக்கூரி முன்னிலை வகித்து விதை ஆய்வின் முக்கியதுவம் பற்றி கூறினார். இப்பயிற்சியில் அரியலூர் விதைச்சான்று அலுவலர் என்.பாஸ்கர் சான்று விதைகள் உற்பத்தி செய்தல் மற்றும் விதைச்சான்று நடைமுறைகள் பற்றி விளக்கி கூறினார்.

அரியலூர் விதை ஆய்வாளர் கோ.காசிநாதன் விதை விற்பனை நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய விற்பனை நடைமுறைகள் மற்றும் பதிவேடுகள் பராமரித்தல் பற்றி விளக்கினார் .

பெரம்பலூர் விதை ஆய்வாளர் சண்முகசுந்தரம் விதைச்சட்ட அமலாக்கம் மற்றும் விதைச்சட்ட விதிகளை மீறுபவார்கள் மீது எடுக்கப்படும் தண்டணை விவரங்களை பற்றி விளக்கி கூறினார்.

இப்பயிற்சியில் விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமம் பெறுவது,உரிமம் புதுப்பித்தல்,விதை இருப்புப்பலகை, விதை இருப்புப்பதிவேடு பராமரித்தல் ,விவசாயிகளுக்கு விற்பனை ரசீது வழங்கும் போது விதையின் பெயர், இரகம், கொள்கலன் அளவு, குவியல் எண், காலாவதிநாள், விவசாயிகளின் கையொப்பம் பெறுதல் மற்றும் மாதாந்திர இருப்புமற்றும் விற்பனை விபரம் சமர்ப்பித்தல் போன்ற நடைமுறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

மேலும், விதை விற்பனை நிலையங்களில் விதைகள் சேமிக்கும் பொழுது உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் அருகில் வைக்காமல், குவியல் வாரியாக மர அட்டகங்களில் சரியாக அடுக்கி வைக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

விதைச்சட்ட நடைமுறைகள் மற்றும் அமலாக்கம் பற்றி தனியார் விதை விற்பனையாளர்களுக்கு விபரமாக எடுத்துரைக்கப்பட்டது. விதைவிற்பனை உரிமம் பெறாமல் விதைவிற்பனை செய்பவர்கள் மீது அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சட்டம் 1955-ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எடுத்துரைக்கப்பட்டது. விதை ஆய்வாளர்கள் விதை விற்பனை நிலையங்களில் எடுக்கப்படும் விதை மாதிரிகளை எவ்வாறு பரிசோதனை செய்து முடிவறிக்கை அனுப்பப்படுகிறது என்புது குறித்தும் தெளிவாக விளக்கப்பட்டது.

விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றுத் துறையினை கணினிமயமாக்கும் பொருட்டு விதை விற்பனையாளர்கள் தங்கள் விற்பனை நிலையங்களில் உள்ள விதை இருப்பு நிலையினை அன்றாடம் கணினியில் பதிவுசெய்ய பயிற்சியளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் நூறுக்கும் மேற்பட்ட தனியார் விதை விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் விதை ஆய்வாளர் சண்முகசுந்தரம் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!