பெரம்பலூர் ; தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களுக்குக் கொண்டுசெல்லும் குறும்படங்களைப் பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் மின்னாக்கி வசதியுடன் கூடிய அதிநவீன மின்னணு விளம்பர வாகனங்களை வாங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 32 அதிநவீன மின்னணு விளம்பர வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
(29.9.15) அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவால் தலைமைச் செயலகத்தில், வழங்கப்பட்ட அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் செயல்பாடுகளை, புதிய பேருந்து நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருதராஜா, சந்திரகாசி மற்றும் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது ஆகியோர் இன்று (2.10.15) நேரில் பார்வையிட்டனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
மக்கள் நலனுக்கென தமிழ்நாடு அரசு வகுத்துவரும் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அரசின் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களால் விளையும் பயன்கள் குறித்தும் மக்களுக்கு முழுமையாக எடுத்துச் சொல்வது போன்ற பணிகளை செய்தி மக்கள் தொடர்புத் துறை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது.
இந்த அதிநவீன மின்னணு விளம்பர வாகனங்களில், வாகனத்தின் இயக்கம், வாகனம் சென்று கொண்டிருக்கும் இடம் மற்றும் வேகம் முதலியவற்றைக் கண்காணிப்பதற்காக நவீன வாகன கண்காணிப்பு சாதனம், பகலிலும் இரவிலும் வேறுபட்ட ஒளி அளவினைக் கட்டுப்படுத்தி தெளிவாகவும், தொலைவிலிருந்தும் பார்க்க இயலும் வகையிலான திரை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மின்னணுத் திரையானது 15.75 அடி அகலமும் 6.25 அடி உயரமும் கொண்டது. ஆயிரக்கணக்கானோர் ஒரே சமயத்தில் படக்காட்சியினைத் துல்லியமாகவும் பல வண்ணங்களில் பிரகாசமாக காணும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடுமிடங்களான திருவிழாக்கள், அரசு விழாக்கள், கண்காட்சிகள், சந்தைகள் போன்ற அனைத்து இடங்களிலும் இம்மின்னணு விளம்பரத் திரை 360 டிகிரியில் அனைத்து திசைகளிலும் சுழலும் வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளது.
இம்மின்னணுத் திரை 6 அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டு அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் எளிதில் காணும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மின்னணுத் திரையினை பார்வையிடும் பொதுமக்களின் எண்ணிக்கையையும் வாகன இருப்பிடத்தையும் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாகனத்தின் உதவியுடன் தமிழக முதலமைச்சர் மக்களுக்காக செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதில் அறியும் பொருட்டு, இவ்வாகனத்தின் மூலமாக மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து குக்கிராமங்களிலும் தமிழ்நாடு திரைப்படபிரிவின் மூலமாக தயாரிக்கப்படும் தமிழக அரசின் சாதனைகள் தொடர்பான குறும்படங்கள் திரையிடப்படும்.
இதன் மூலமாக பொதுமக்கள் தங்களுக்காக அரசு செய்து வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எளிதில் அறிந்து கொள்வதுடன், அத்திட்டங்கள் மூலமாக தானும் பயன்பெற எந்த அலுவலரை அணுகுவது, அதற்குரிய தகுதிகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களின் பகுதிகளுக்கு அதிநவீன மின்னணு விளம்பர வாகனங்கள் வருகை தரும்பொழுது மக்கள் அனைவரும் தமிழக அரசின் சிறப்பான திட்டங்களை மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் அறிந்து கொண்டு பயன் பெற வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன், நகராட்சித்தலைவர் ரமேஷ், நகராட்சி ஆணையர் முரளிதரன், குரும்பலூர் பேரூராட்சி மன்ற தலைவர் பாப்பம்மாள், மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.