பெரம்பலூர் : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கில் இருந்து விடுதலை பெற்றதை முன்னிட்டும், மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டியும், பல்லாண்டு நீடுடி வாழ வேண்டியும் பெரம்பலூர் மாவட்ட விவசாய பிரிவு சார்பாக 1008 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தி அன்னதானம் வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்டம் சு.ஆடுதுறை குற்றம் பொறுத்துதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டுக்கு சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்ட விவசாய பிரிவு செயலருமான ம.சந்திரகாசி தலைமை தாங்கினார். இவர் தேங்காய் உடைத்து வழிபாட்டை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் பலர் வந்து 1008 தேங்காய்களை உடைத்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியையொட்டி ஆடுதுறை குற்றம் பொறுத்துதீஸ்வரர், விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன் (ஆலத்தூர்), கண்ணுசாமி (வேப்பந்தட்டை), கிருஷ்ணசாமி(வேப்பூர்), பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ பூவை.செழியன், வேப்பூர் ஒன்றிய சேர்மன் கிருஷ்ணசாமி உள்பட அதிமுகவினர் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர். இந்த வழிபாட்டில் பங்கேற்ற அதிமுகவினர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கில் இருந்து விடுதலை பெற்றதை முன்னிட்டும், மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டியும், பல்லாண்டு நீடுடி வாழ வேண்டியும் பிராத்தனை செய்தனர்.