பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உயர் அலுவலர்களின் எல்லை மீறிய தொல்லைகளை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை மாலை வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் நடைபெற்ற வெளிநடப்பு போராட்டத்துக்கு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க வட்டத் தலைவர் சித்தார்த்தன் தலைமை வகித்தார்.
மாவட்டத் துணைத்தலைவர் ம. செல்வபாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் சித்ரா, சின்னப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் துணைத்தலைவர் பி. தயாளன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இந்த போராட்டத்தில், கால அவகாசம் வழங்காமலே பணி முடிக்க நிர்ப்பந்திப்பது, சாத்தியமற்ற இலக்குகளை திணிப்பது, பல்லாயிரக் கணக்கான கழிவறைகளை நிகழாண்டிலேயே கட்டி முடிக்க நிர்பந்திப்பது, சமூகத் தணிக்கை என்ற பெயரால் அலுவலர்களின் ஊதியத்தில் பணப்பிடித்தம் செய்வது, 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யாமலே அதிக ஊதியம் வழங்க நிர்பந்திப்பது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துக்கு நிதி வழங்காமல் பணியை முடிக்க நிர்பந்திப்பது, அனைத்தையும் வாட்ஸ் அப், எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி நிம்மதி இழக்கச் செய்வது, தற்கொலை, மரணம், மன உலைச்சல் ஆகியவற்றுக்கு ஊழியர்களை உட்படுத்துவது. இரவு நேரக் கூட்டங்கள், விடுமுறை தின ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடும் இயக்குநர், செயலர், சமூகத் தணிக்கை இயக்குநர் ஆகியோரின் ஊழியர் விரோத போக்கை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கவேல் நன்றி கூறினார்.
இதே கோரிக்கையை வலியுறித்தி வேப்பூரில் அச்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பலர் பங்கேற்றனர்.