பெரம்பலூர் : வேப்பந்தட்டையை அருகே உள்ள அனுக்கூரில் ஒரு சமுதாய தலைவரைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து மர்ம நபர்கள் போஸ்டர் அடித்து நேற்று நள்ளிரவில் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் ஊரில் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது . இதனைக் கண்டித்து ஒரு சமுதாய மக்கள் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு கூடி தங்களது குழந்தைகளை பள்ளிக்குள் அனுப்பாமல் வகுப்பையை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவலறிந்த வருவாய் கோட்டாச்சியர் மதுசூதனரெட்டி, மங்களமேடு காவல் நிலைய ஆய்வாளர் சிட்ரிக் மேனுவல் மற்றும் கல்வி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி போஸ்டர் ஒட்டியவர்கள் யார் என கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு தங்களது குழந்தைகளை வகுப்புகளுகக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.