சென்னை: இன்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
தந்தை பெரியார் அவர்களின் அண்ணன் மருமகளும், பேரறிஞர் அண்ணா அவர்களின் தம்பிமார்களில் ஒருவரும், என் அன்பு நண்பருமான “சொல்லின் செல்வர்”, ஈ.வி.கே. சம்பத் அவர்களின் துணைவியாரும் – தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், தம்பி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் அருமை அன்னையாருமான திருமதி சுலோசனா சம்பத் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
அண்மைக் காலத்தில் நான் அந்த அம்மையாரைச் சந்திக்கவில்லை என்ற போதிலும், சம்பத் அவர்கள் உயிரோடு இருந்த போது திராவிட இயக்க உணர்வோடு அவர்கள் மேற்கொண்ட செயல்பாடுகளையெல்லாம் நான் நன்கறிவேன்.
அன்னையாரை இழந்து வாடும் தம்பி இளங்கோவன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதிமுக அமைப்பு செயலாளராக பதவி வகித்த சுலோச்சனாவுக்கு, திமுக தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக பொருளாளர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், சுலோச்சனாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.