பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறையில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுங்கச் சாவடி ஊழியர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறையில் உள்ள சுங்கச் சாவடியில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 4 ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் பணிக்கேற்ப ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும், தொழிலாளர் சட்டப்படி போக்குவரத்துப்படி, உணவுப்படி, கல்விப்படி, சலவைப்படி இரவு பணிப்படி உள்ளிட்டவை வழங்க வேண்டும்.
தற்காலிக பணி நிறுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கும், ஓராண்டுக்கு மேல் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
திருமாந்துறை சுங்கச் சாவடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஏ.ஐ.டி.யூ.சி கிளைச்செயலர் ஜெ. விஜயக்குமார் தலைமை வகித்தார்.
மாவட்டத் துணைச்செயலர் ராஜேந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சுங்கச்சாவடி ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.