பெரம்பலுார்: கடலுார் மாவட்டம் அதர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(41), இவர் ஆலம்பாடி தி.மு.க., கிளை செயலாளராக உள்ளார். இவரது மகள் பெரம்பலுாரில் உள்ள தனியார் மகளிர் கல்லுாரியில் படித்து வருகிறார்.
தனது மகளை பார்ப்பதற்காக இன்று பாலகிருஷ்ணன் இரு சக்கர வாகனத்தில் பெரம்பலுார் நோக்கி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்துக் கொண்டிருந்தார்.
வல்லாபுரம் பிரிவு ரோடு அருகே வந்தபோது இவரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பாலகிருஷ்ணனிடம் லிப்ட் கேட்டுள்ளனர். டூவீலரை பாலகிருஷ்ணன் நிறுத்தாமல் ஓட்டியபோது காரில் இருந்து இறங்கிய ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலகிருஷ்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி காரில் கடத்தியது.
காரில் கடத்தப்பட்ட பாலகிருஷ்ணன் வரும் வழியி்ல் நின்றுக்கொண்டிருந்த ஹைவே பெட்ரோல் போலீஸாரின் ஜீப்பை கண்டதும் ஜன்னல் வழியே கையை நீட்டி சத்தமிட்டு அழைத்துள்ளார். இதையடுத்து ஹைவே போலீஸார் அந்த காரை துரத்தி சென்று மடக்கிப்பிடித்து பாலகிருஷ்ணனை மீட்டனர்.
கடத்தலில், ஈடுபட்ட பெரம்பலுார் மாவட்டம் பெண்ணக்கோணம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்( 40), கடலுார் மாவட்டம் தொழுதூரை வெங்கடேசன்(39), அரியலுார் மாவட்டம் துளார் அருள்ஜோதி(29), பொன்பரப்பி வாசு (30), ரகுநாதன்(35), ஆகிய ஐந்து பேரை கைது செய்து மங்கலமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் டூவீலரில் தப்பியோடிய துளார் தமிழரசன், சுதாகரன் ஆகியோரை மங்கலமேடு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.