பெரம்பலூர் : நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்ட காவலர்கள் 915 பேர் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், முன்னாள் படைவீரர்கள், என்.சி.சி. அமைப்புகளில் உள்ளவர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிக்கு அமைக்கப்பட்டுள்ள 6 பறக்கும் படைகளிலும் தலா ஒரு ‘பி’ குரூப் நிலையிலுள்ள அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடியோ கண்காணிப்பு குழுக்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக 2 துணை ராணுவ பட்டாலியன் குழுக்கள் வருகை தந்துள்ளனர். ஒரு பட்டாலியன் குழுவில் 85 பேர் வீதம் மொத்தம் 170 பேர் வருகை தந்துள்ளனர். இதில் பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதிக்கான பட்டாலியன் குழுவிற்கு துணை கமாண்டர் சத்தேந்திரசிங் என்பவரும், குன்னம் சட்ட மன்றத் தொகுதிக்கான பட்டாலியன் குழுவிற்கு துணை கமாண்டர் மணிஷ் ஜே.ஆர். தத்திக்கர் என்பவரும் தலைமை ஏற்றுள்ளனர்.
பெரம்பலூருக்கான பெட்டாலியன் குழுவினர் தண்ணீர்ப்பந்தலில் உள்ள ஆயுதப்படை மைதான வளாகத்திலும், குன்னம் சட்ட மன்றத் தொகுதிக்கான பெட்டாலியன் குழுவினர் எம்.எஸ்.டி. திருமண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கான பட்டாலியன் குழுவினரின் கொடி அணிவகுப்பு இன்று நடைபெற்றது. பாலக்கரையிலிருந்து துவங்கிய இந்த அணிவகுப்பு சங்குப்பேட்டை வழியாக பழையபேருந்து நிலையத்தை அடைந்து மீண்டும் பாலக்கரை வந்தடைந்தது.