அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே 144 தடை உத்தரவையும் மீறி சில அரசியல் கட்சிகள் ,அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சிலர் ஊடுருவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், காவல்துறையினர் மீதும் கல்வீசி தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுத்துறை வாகனங்கள், காவல்துறை வாகனங்கள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தி கலவரத்தில் ஈடுபட்டதாகவும் தெற்கு காவல் நிலையம், பல்வேறு வணிக வளாகங்கள் ஆகியவற்றை சேதப்படுத்திய தாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த கலவரத்தை தடுக்கவும், பொதுமக்களின் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கவே காவல்துறையினர் தடியடி , கண்ணீர் புகை குண்டுவீச்சு வீசியதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆனால், கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரமுடியாத நிலையில் தான், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே பொதுமக்கள் இச்சம்பவத்தினால் உணர்ச்சி வயப்படாமலும், யாருடைய தூண்டுதலுக்கும் ஆளாகாமலும், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதி நிலவ பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.