பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி தடகள வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற வீராங்கனைக்கு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்திய தடகள சம்மேளனம் சார்பில் 27-வது தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையேயான இளையோர் தடகள போட்டிகள் ஆந்திர பிரதேச மாநிலம், காக்கிநாடா ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் செப்டம்பர் 24 முதல் செப்டம்பர்-26 வரை நடைபெற்றது.
இதில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி தடகள வீராங்கனை செல்வி என்.நாகப்பிரியா என்பவர் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு 16-வயதுக்குட்பட்ட பிரிவில் பென்டாத்லன் போட்டியில் தங்கப்பதக்கமும், (பென்டாத்லன் போட்டி என்பது 100 மீ தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், 800 மீ ஓட்டம் ஆகிய போட்டிகள் அடங்கியது) உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்று நமது மாநிலத்திற்கும், பெரம்பலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவி பெரம்பலூர் மாவட்டம் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். வெற்றி பெற்ற வீராங்கனை மற்றும் பயிற்றுநர் கோகிலாவிற்கும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது வாழ்த்துகளை தெரிவித்தார்.