தமிழகத்தில் அக்டோபர் 28-ஆம் தேதி, வட கிழக்குப் பருவ மழை தொடங்கியது. இந்த நிலையில், தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் 3 நாள்களாகப் பலத்த மழை பெய்தது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புதுச்சேரிக்கு அருகே வடக்கே நகர்ந்து திங்கள்கிழமை இரவு கரையைக் கடந்தது. அப்போது, வரலாறு காணாத அளவுக்கு 480 மி.மீட்டர் அளவுக்கு பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக, கடலூர், சிதம்பரம், நெய்வேலி ஆகியப் பகுதிகள் வெள்ள நீரால் சூழந்துள்ளது. கரையைக் கடந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து, வேலூர் அருகே மையம் கொண்டு இருந்தது. அது, மேலும் வலுவிழந்து கர்நாடகம் வழியாக கேரளா அருகே சென்றது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர். ரமணன் கூறியதாவது: செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில், வேலூர் அருகே 60 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலு குறைந்து தீவிர காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியது.

இது மேற்கு நோக்கி நகர்ந்து, வடக்கு தமிழகம், தெற்கு கர்நாடகம் இடையே தாழ்வுப் பகுதியாக மாறி நிலைக் கொண்டு இருந்தது. புதன்கிழமை காலை கேரளம், அதை ஓட்டியப் பகுதியில் காற்று மேலடுக்குச் சுழற்சியாக நீடிக்கிறது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் ஆம்பூரில் 80 மி.மீ, சேலம் மாவட்டம் ஏற்காடு 60 மி.மீ, நீலகிரி மாவட்டம் உதக மண்டலம், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி 50 மி.மீட்டர் மழை பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பரூரில் 40 மி.மீ, ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி, வேலூர் மாவட்டம் ஆலங்காயம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் தலா 40 மி.மீட்டர் மழை பதிவானது.

மீண்டும் மழைக்கு வாய்ப்பு:

அடுத்த 24 மணி நேரத்தில் மேலடுக்கு சுழற்சியால், தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே தெற்கு அந்தமான் பகுதியில், புதிதாகக் காற்றழுத்தத் தாழ்வு உருவாகி வருகிறது. இது நகரும் பட்சத்தில், தமிழகம், புதுச்சேரியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) முதல் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார் அவர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!