மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசுகிறார் மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம்.
பெரம்பலூர் : தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்கடனுக்கு வட்டி மானியம் தொடர்ந்து வழங்க வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பி. மாணிக்கம், மாவட்டச் செயலர் ப. நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 33 சதவீத பயிர் மகசூல் பாதிக்கப்பட்டாலும், வறட்சி பாதிப்புக்குரிய சலுகை வழங்க மத்திய அரசின் அறிவிப்பை அரசாணையாக வெளியிட்டு, அதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தேசிய வேளாண்மை பயிர் காப்பீடு திட்டத்தில் கடைபிடித்து வரும் கொள்கையில் மாறுதல் செய்து, அதே தவணையில் ஒரு கிராமத்தில் பயிர் பாதிக்கப்பட்டாலும் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் வகையில் மாறுதல் செய்ய வேண்டும்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய பயிர் மற்றும் நகைக்கடனுக்கு மத்திய அரசு அளித்து வந்த வட்டி, மானிய கொள்கையில் மாறுதல் செய்யாமல் வட்டி மானியம் தொடர்ந்து வழங்க வேண்டும். விவசாய நிலத்தை கையகப்படுத்த பிறப்பித்த அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும். கிராம பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் கொள்முதல் செய்யும் பால் முழுவதையும் ஆவின் நிர்வாகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
குரங்கு, மயில் ஆகிய வன விலங்குகளால் விவசாய பயிருக்கு ஏற்பட்டு வரும் மகசூல் இழப்பை தடுக்க நான்கு வழிச்சாலையில் புளி, மா, கொய்யா போன்ற மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதோடு, காட்டுப் பன்றியை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 5 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள உழவர் தின பேரணி, பொதுக்கூட்டத்தில் திரளான விவசாயிகள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட பொருளாளர் எ. மணி, இளைஞரணி செயலர் எம். பெரியசாமி, வட்டார பொறுப்பாளர்கள் கே. துரைராஜ், விவேகானந்தன், வி. துரைசாமி, பி. சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.