தேசிய அளவிலான 15-வது பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான 15-வது பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையில் கர்நாடக மாநிலம் பெல்காமில் நடைபெற்றது.
இப்போட்டியில் கலந்து கொள்ள புதுவாழ்வுதிட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து சிறுகன்பூரை சேர்ந்த எ.திவ்யா, தேவையூர் ஊராட்சியை சேர்ந்த டி.அம்பிகாபதி மற்றும் மேலப்புலியூர் ஊராட்சியை சேர்ந்த எஸ்.கலைச்செல்வன் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் அம்பிகாபதி மற்றும் திவ்யா ஆகியோர் இரண்டு தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என எட்டு பதங்கங்களைப் பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். பதக்கங்களை வென்ற வீராங்கனைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது சந்தித்தபோது, விளையாட்டுத்துறையில் மேலும் பல்வேறு சாதனைகளை படைத்து நமது பெரம்பலூர் மாவட்டத்திற்கும், நமது நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் உருவாக வேண்டும் என்று மனதார பாராட்டுகின்றேன் என்று மாவட்ட ஆட்சியர் வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் புதுவாழ்வு திட்ட மாவட்ட திட்ட மேலாளர் எம்.ரூபவேல் மற்றும் உதவி திட்ட மேலாளர்கள் உடனிருந்தனர்.