பெரம்பலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினரை பணி செய்ய விடாமல் தடுத்த போதை வாலிபரை போலீசாரால் கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் ஆலத்தூர் வட்ட வழங்கல்அலுவலர் பழனிச்செல்வம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த அதிமுக ஒன்றிய பிரதிநிதி சீதாபதி என்பவரின் காரை மறித்து சோதனை செய்து கொண்டிருந்தனர். இதனையறிந்த சிறுவாச்சூரைச்சேர்ந்த சீதாபதியின் ஆதரவாளர் முத்துசாமி மகன் சதீஷ்குமார்(27), என்பவர் மதுபோதையில் தேர்தல் பறக்கும் படையினரை பணி செய்யவிடாமல் தடுத்து தகராறு செய்துள்ளார்.
இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் பழனிச்செல்வம் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து சிறையிலடைத்தனர்.