தேர்தல் விதிமீறல்கள் குறித்து தகவல்கள் அளிக்க கிராமங்கள் அளவில் விழிப்புணர்வுக் குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடக்கிறது.
பெரம்பலூர் : நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் விதி மீறல்கள் குறித்து பொதுமக்கள் தகவல் அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாட்டு அறையை 18004257031 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் நடக்கும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிப்பதற்கும், இதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் புகார் அளிப்பதற்கும் பிர்கா வாரியாக கிராம விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளில் செந்துறை வட்டத்தையும் சேர்த்து மொத்தம் 151 கிராம ஊராட்சிகள் உள்ளன. அனைத்து கிராம ஊராட்சிகளிலும்; உள்ள இளைஞர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினருக்கு எவையெல்லாம் தேர்தல் விதிமீறல்கள் என்பது குறித்தும், எவ்வாறு தங்கள் புகார்களை தெரிவிக்க வேண்டும் என்பது குறித்துமான பயிற்சிகள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மூலம் அந்தந்த வட்டாட்சியர் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும், கிராம விழிப்புணர்வுக் குழு உறுப்பினர்களுடான கூட்டம் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தலைமையில் அவ்வப்போது நடத்தப்பட்டு தேர்தல் விதிமீறல்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றது.