படவிளக்கம்: பெரம்பலூரில் நடந்த கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் ஈஸ்வரன் பேசுகிறார். அருகில் மாநில நிர்வாகிகள்.
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் இன்று நடந்தது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.மாநில துணை தலைவர் சாமிதுரை, மாநில துணை பொதுசெயலாளர் நஜ்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், வீரபாண்டியன், ராமஜெயம், சுப்ரமணியன், பியாரே ஜான்,அன்புராஜ், உத்திராபதி, நதியா, சோலைராஜன் உட்பட பலர் பேசினர்.
இதில் தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தவேண்டும், இயற்கை விவசாய முறைகளை பயன்படுத்திட விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவு முறைகளின் பயன்பாட்டையும், மருத்துவ குணங்களையும் மக்களுக்கு விளக்கி கூறுதல், அதிகளவில் உறுப்பினர் சேர்த்தல், கிளைகளை பதிவு செய்தல்,தொழிலாளர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் மே தின நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாடுதல், மற்றும் பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சி, பிரச்சாரம், தெருமுனை கூட்டம் நடத்துதல், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த முத்தரப்பு கூட்டத்தினை அரசு கூட்டவேண்டும், ஒரே மாதிரியான செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்.
தொழிற்சங்க விரோத போக்øகை அரசு கைவிட்டு தொழிலாளர் நலன் காத்திடவேண்டும். அரசின் சிறப்பு திட்டமான ஏழை பெண்களின் திருமணத்திற்கு தங்கத்துடன் கூடிய நிதி உதவி வழங்கும் திட்டத்தில் அரைபவுன் தங்கம் மற்றும் பட்டபடிப்பு பயின்றவர்களுக்கு ரூ 50ஆயிரமும், மற்றவர்களுக்கு ரூ 25 ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஆனால் நல வாரிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் திருமண உதவி தொகை ரூ 3ஆயிரம் முதல் ரூ 5ஆயிரம் வரை மட்டுமே. இதில் அரசு பாராபட்சமாக செயல்படுவதை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக பொதுசெயலாளர் அருண்குமார் வரவேற்றார். முடிவில் மாநில பொருளாளர் சுகந்தி நன்றி கூறினார்.