பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு பேரணிகள், கொசு ஒழிப்பு பணிகள் என அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றது. அதனடிப்படையில் பெரம்பலூர் நகராட்சியின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட டெங்குவை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இப்பேரணியை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா துவக்கி வைத்தார்.
பேரணியின்போது பொதுமக்கள் மற்றும் சாலையோரக் கடைகளில் உள்ள நபர்களிடம் டெங்குவை ஒழிப்பது தொடர்பான துண்டுபிரசுரங்களையும் வழங்கினார்.
இப்பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டு டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசுவை ஒழிப்பது தொடர்பான பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனர். மேலும் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி, பெரம்பலூர் நகராட்சித் தலைவர் ரமேஷ், நகர் மன்ற ஆணையாளர் முரளி, சுகாதாரத்துறை துணை இயக்குநர; மருத்துவர் சேரன் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.