பெரம்பலூர்: நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தற்போது பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையினால் துறையூர் – பெரம்பலூர் சாலையில் (கி.மீ.16.2ல் நக்கசேலம் அருகே) சுமார் 100 ஆண்டுகள் பழமையான, 2.5மீட்டர் அகலமுள்ள இரண்டு கண் செங்கல் ஆர்ச் சிறுபாலத்தில், தார்ச்சாலையின் இடதுபுற விளிம்பிலிருந்து 2 மீட்டர் தூரத்தில் 30 செ.மீ. விட்ட அளவிற்கு துளை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து செயல்பட்டு துளை மேலும் பெரிதாகி போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடாதவாறு துரித நடவடிக்கை எடுத்தனர். அதன்படி துளை விழுந்த பகுதி இடிக்கப்பட்டு, 1மீட்டர் விட்டமுள்ள சிமெண்ட் குழாய்களை பதித்து கிராவல் மற்றும் கலவை மூலம் துளை சரிசெய்யப்பட்டது. தற்போது போக்குவரத்திற்கு சீராக நடைபெற்று வருகின்றது. நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த சிறுபாலம் என்பதால் சாலையோரத்தில் பயணிகளின் கவனத்திற்காக “மெதுவாக செல்லவும்” என்ற அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மழைக்காலம் என்பதால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சாலைகள் பழுதடையும் நிலை ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்யத் தேவையான அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளோடும் நெடுஞ்சாலைத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என இவ்வாறு நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.