மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நந்தகுமார் விடுத்துள்ள தகவல்:
வரும் 16 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை சுமூகமாகவும், நேர்மையான முறையிலும் நடத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளில் உள்ள 638 வாக்குச்சாவடி மையங்களில் 3,077 பேர் வாக்குச் சாவடி அலுவலர்களாகவும், 189 பேர் மண்டல அலுவலர்களாகவும், 82 பேர் இதர பணிகளிலும் ஈடுபடவுள்ளனர்.
மேலும், பாதுகாப்புப் பணியில் 170 துணை ராணுவத்தினரும், 506 காவலர்களும், 52 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், 185 பயிற்சி காவலர்களும், 14 பயிற்சி துணை ஆய்வாளர்களும், 40 முன்னாள் படைவீரர்களும், 95 என்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்களும் என மொத்தம் 1,243 நபர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், மாவட்டம் முழுவதிலும் பறக்கும் படைக் குழுக்கள், தீவிர கண்காணிப்புக் குழுக்கள் முழு வீச்சில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்பட்டு வருகின்றனர். நேர்மையான, கண்ணியமான தேர்தலை நடத்திட பொதுமக்களும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
தங்கள் பகுதிகளில் தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து ஏதேனும் தகவல் அறிந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசியை 18004257031 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என தெரிவித்துள்ளார்.