பெரம்பலுார் ; பெரம்பலுாரில் போலீஸ் எஸ்.ஐ., ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்கு நினைவஞ்சலி டிஜி்ட்டல் தட்டி வைத்துள்ளார்.
அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஐய்யப்பன்நாயக்கன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாறன் (38), இவர் பெரம்பலுார் துறையூர் சாலையில் முத்துக்கோனார் திருமணம் மண்டபம் பின்புறம் உள்ள வாடகை வீட்டில் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெரம்பலுார் மாவட்ட குற்றப்பிரிவு எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது வீட்டில் பொமேரியன் இனத்தை சேர்ந்த ஒரு நாயை ரோஷன் என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தார். இந்த நாய் டூவீலரில் அடிபட்டு கடந்த ஒரு வருடத்துக்கு முன் இறந்து விட்டது. அந்த நாய் உயிருடன் இருந்தபோது தனது குடும்பத்துக்கு நன்றி உள்ள ஜீவனாக அந்த நாய் இருந்ததற்காக, நன்றி மறக்காத எஸ்.ஐ., மாறன் பெரம்பலுார் சங்குப்பேட்டை பகுதியில் அதற்கு நினைவஞ்சலி டிஜிட்டல் பேனர் வைத்துள்ளார்.
இது குறித்து எஸ்.ஐ., மாறன் கூறுகையில் : ரோஷன் எங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்தது. காலை 7 மணிக்கு தினந்தோறும் நான் வாக்கிங் செல்வேன். என்னுடனே வரும் அது ஊட்டி காபி பாரில் பால் அருந்தும். நான் வெளியூர் செல்லும் நாட்களிலும் அது தனியாக வாக்கிங் சென்று அதே கடையில் பால் அருந்துவிட்டு வரும். நான் குழந்தைகளை குச்சியால் அடித்தால் அது தாவி குச்சியை பிடிங்கிக்கொண்டு ஓடிவிடும். மிக நன்றி உள்ளது. வித்தியாசமான நடவடிக்கை உள்ளது.
நான் கிணற்றில், குளித்தால், கடலில் எங்கு குளித்தாலும் அதுவும் என்னுடனே குளிக்கும். எனது பிள்ளைகள் பள்ளிக்கு சென்று வரும்போது மெயின்ரோட்டிற்கு சென்று அழைத்து வரும். நாங்கள் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டால் உணவருந்தாது. ஓட்டலில் நாங்கள் குடும்பத்துடன் உணவருந்த சென்றால் அதற்கு ஒரு நாற்காலி ஒதுக்கி உணவு வாங்கி கொடுக்க வேண்டும். நாற்காலி கொடுக்கவில்லை என்றால் அதை பெறும் வரை எங்களை உட்காரவிடாது.
எங்கள் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் நாங்கள் வரவேற்றால் அதுவும் வரவேற்கும். ரோஷன் இறந்தபோது எங்கள் குடும்பத்தி்ல் உள்ள அனைவரும் மூன்று மாதத்துக்கு அதை மறக்க முடியாமல் தவி்த்தோம். குடும்பத்தினர் விருப்பத்திற்காக ரோஷனுக்கு நினைவஞ்சலி டிஜிட்டல் வைத்துள்ளோம் என்றார்.