சுகாதாரத்துறை, விளையாட்டு துறை மற்றும் கால்நடை துறை சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர். அதன்படி, மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் 28 கோடி மதிப்பில் கட்டுப்பட்டுள்ள 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, தேர்வு கூடம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், பல்வேறு பகுதிகளில் சுமார் 38 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடும்ப நலத்துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். சென்னை, மதுரை, திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 12 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள நவீன மருத்துவ கருவிகளை துவக்கி வைத்தார். இதேபோன்று, விளையாட்டு துறை சார்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும விளையாட்டு பல்கலைக்கழகத்தில் சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம், நூலகக் கட்டடம் உள்ளிட்ட பல கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், சென்னையில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 18ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 28 உலக நாடுகளிலிருந்து 171 வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியா சார்பில் 12 வீரர், வீராங்களைகள் பங்கேற்கவுள்ளனர்.