பெரம்பலூர் அருகே நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
நேற்று இரவு, மதுரையில் இருந்து சென்னையை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அது, திருச்சி. சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் சர்க்கரை ஆலை சின்னாறு அருகே நள்ளிரவு 1.30 மணி அளவில் வந்த போது ஆம்னி பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததால், அங்கு பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், தேனியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் கோபால்(42) , உதவியாளர் அரவிந்த் (24), ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி இறந்தனர்.
பேருந்தில் பயணித்த தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்அமுதன்(36), சென்னை ஆவடியை சேர்ந்த முத்துராஜ் மற்றும் ஆம்னி பஸ்சின் மற்றொரு டிரைவரான மதுரை
கீரணூரைச்சேர்ந்த சுப்ரமணியன்(64) ஆகியோர் படுகாயமடைந்து இடிபாடுகளுக்கிடையே சிக்கிகொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, நெடுஞ்சாலை ரோந்து போலீசார் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
பெரம்பலூர் அரசுமருத்துவமனயில் சிகிச்சை பெற்று வந்த சுப்ரமணி சிகிச்சையின் போது உயிரிழந்தார். தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவர் அமுதன் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் திருச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.