பெரம்பலுார் : நாகப்பட்டினம், கடசல்கார தெருவை சேர்ந்தவர் டாக்டர் தாஹீர்,55, மனைவி ஜெய்துான்பி. இவரது தந்தை, பெரம்பலுார் மாவட்டம் அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்த அப்துல்ரஹ்மான் என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தை 1983ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி ஜெய்துான்பிக்கு பதிவு செய்யப்பட்ட சென்டில்மெண்ட் ஆவணம் மூலம் எழுதி வைத்தார். அப்துல்ரஹ்மான் 2004ம் ஆண்டு ஜெய்துான்பி இறந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஜெய்துான்பியின் அக்கா பெரம்பலூர் மாவட்டம் பாடாலுார் கிராமத்தை சேர்ந்த அப்துல்சலாம் மனைவி ஆமினாபி என்பவர் ஜெய்துான்பிக்கு சொந்தமான நிலத்தை தனக்கு சொந்தம் என பொய்யாக கூறி விஜயபுரம் கிராமத்தை சேர்ந்த ஜமால்முகமதுவுக்கு 2005ம் ஆண்டு விற்பனை செய்துவிட்டார் என கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போதே ஜமால்முகமது அந்த நிலத்தை இதே கிராமத்தை சேர்ந்த சபியுல்லா என்பவருக்கு 21.5.2008ல் பவர் பத்திரம் எழுதி கொடுத்ததின் அடிப்படையில் சபியுல்லா தனது மகன் தவுபிக்கிற்கு 18.11.2008ல் கிரையம் எழுதிக்கொடுத்துவிட்டதாக தெரிகிறது.
இது குறித்து 24.5.2014ல் தகவல் தெரியவந்தது. இதனையடுத்து ஜெய்துான்பியின் கணவர் தாஹீர், ஆமினாபிவிடம் கேட்டபோது, ஜமால்முகமது, சபியுல்லா, முகமதுசித்திக், தெளபிக் ஆகியோர் சேர்ந்து தாஹீரை மிரட்டினர்.
இதைத்தொடர்ந்து தாஹீ்ர், ஜெய்துான்பி, இவரது மகன் சஹாபுதீன் ஆகியோர் தங்களது நிலத்தில் உள்ள கருவேல மரங்களை வெட்டி சுத்தம் செய்தபோது விஜயபுரத்தை சேர்ந்த ஷேக்அலாவுதீன் மகன் ஜமால்முகமது, அரும்பாவூரை சேர்ந்த அப்துல்ஜலீல் மகன்கள் சபியுல்லா, முகமதுசித்திக், தெளபிக், பாடாலுாரை சேர்ந்த அப்துல்சலாம் மனைவி ஆமீனாபி ஆகியோர் சேர்ந்து ஜெய்துான்பி, தாஹீ்ர், சஹாபுதீன் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து தாஹீர் அரும்பாவூர் போலீஸில் கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆமினாபி, ஜமால்முகமது, சபியுல்லா, முகமதுசித்திக், தெளபிக் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். நில மோசடி ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என தாஹீர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தயடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் சித்திக், சபியுல்லா, தவ்பீக் ஆகிய மூவரையும் கைது செய்து பெரம்பலுார் கிளை சிறையில் அடைத்தார். தலைமறைவாக உள்ள ஜமால்முகமது, ஆமினாபி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.