pledgeபெரம்பலூர் மாவட்டம் முழுவதும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் “நேர்மையாக வாக்களிக்க வாக்காளர்கள் உறுதிமொழி” 2 நிமிட நிகழ்ச்சிக்க சுமார் 2 மணி நேரம் காக்க வைத்த கலெக்டர். பொதுமக்கள் அவதி.

தமிழகத்தில் மே 16 அன்று சட்ட மன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு; 100 சதவீதம் நேர்மையுடன் வாக்களிக்க வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி இன்று காலை 10.00 மணியளவில் “நேர்மையாக வாக்களிக்க வாக்காளரின் உறுதிமொழி” என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள கிராமங்கள், அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் நடைபெற்றது.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தேர்தல் பொது பார்வையாளர் என்.விஷ்ணு, மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தேர்தல் செலவினப் பார்வையாளர் ராஜேஷ்கவுலி, வருமான வரித்துறை துணைஆணையர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

அதன்பின்னர; மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி “நேர்மையாக வாக்களிக்க வாக்காளரின் உறுதிமொழி” என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.

அனைத்து கிராமங்களிலும் உள்ள கிராம விழிப்புணர்வு குழுக்கள், வாக்குச்சாவடி விழிப்புணர்வு குழுக்கள், சுய உதவிக் குழுக்கள், ஆகியோர் தங்கள் பகுதியிலுள்ள வாக்காளர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அது மட்டுமல்லாது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளின் அலுவலகங்கள், சர்க்கரை ஆலை, எம்.ஆர்.எப் டயர் உற்பத்தி ஆலை உள்ளிட்ட நிறுவனங்களிலும், கல்லூரிகளிலும், பெரம்பலூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனைகள், தனியார் மருத்துவ மனைகள், வறுமை ஒழிப்பு சங்கங்கள் உள்ளிட்ட இடங்களிலும் இந்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகளில் 2,38,473 நபர்கள் கலந்துகொண்டு நேர்மையுடன் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தேர்தல் நாள் வரை இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும், என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் ஏற்ப்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் பிரபல திரை நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்களை திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் கு.செல்வராசு, நகர்மன்ற ஆணையர் முரளி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவழகன் மற்றும் வணிகர் சங்கம், உணவக உரிமையாளர் சங்கம், லயன்ஸ், ரோட்டரி சங்கங்கள், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம், செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஆனால்,

உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு கலெக்டர் மற்றும் தேர்தல் பொது பார்வையாளரின் கால தாமத வருகையால் 10.45 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இதனால் காலை 9 மணி முதல் 10.45 மணி வரை கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் உள்பட உறுதி மொழி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அனைவரும் 2 மணி நேரத்திற்கு மேலாக அருந்துவதற்கு தண்ணீர் இல்லாமல் தாகத்துடன் கடுமையான வெயிலில் காத்திருந்தனர்.

மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் வெயிலின் தாக்கத்தை குறைத்து கொள்ள அவர்களிடம் கொடுக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பலர் விசிறியாக பயன்படுத்தி கொண்டிருந்தனர்.

இதனிடையே நோயாளி ஒருவரை ஏற்றி கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட்ட நெறிசல் காரணமாக அவ்வழியை கடந்து செல்ல முடியாமல் நீண்ட நேரத்திற்கு பின்னர் மாற்று வழியில் சென்றது.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் உறுதி மொழி நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பதை அறிந்தும் போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை.

இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சமூக அக்கறையோடு பங்கேற்க வரும் தன்னார்வலர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டியது நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களின் கடமை.

மேலும் இதுபோன்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் தலைமை ஏற்று வழி நடத்தி செல்ல கூடிய கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அரசியல் வாதிகள் கால தாமதத்தை தவிர்ப்பதுடன், தன்னை போலவே பிறரையும் மதிப்பதே மனித மாண்பு என்பதை உணர வேண்டும்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!