நேர்மையான வாக்குப்பதிவை வலியுறுத்தி மே 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்டம் முழுவதும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது – வாக்காளர்கள் அனைவரும் பங்கெடுக்க மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.நந்தகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் அனைவரும் நேர்மையான முறையில் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மே 10ஆம் தேதி காலை 10 மணிக்கு 1 கோடி பேர் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வை செயல்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர்கள் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதிகளுக்குட்பட்ட 638 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்படவுள்ளது.
பழையபேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோட்டரி, லயன்ஸ் சங்கங்கள், உணவக உரிமையாளர் சங்கங்கள், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகள், கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பங்குபெரும் மாபெரும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு மே 10ஆம் தேதி காலை 10 மணிக்கு நடத்தப்பட உள்ளது.
வாக்காளர்களாகிய அனைவரும் தவறாது நமது ஜனநாயகக் கடமையினை நேர்மையுடனும், கண்ணியத்துடனும் ஆற்ற வேண்டும் என்பதை எடுத்துறைக்கும் வகையில் தங்கள் பகுதிகளில் நடைபெறவுள்ள இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்வில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.