பெரம்பலூர் : நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், தங்களது வாக்கை விலைக்கு விற்க வேண்டாம் என்பதை உணர்த்தும் வகையிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் குரூர் மற்றும் நக்கசேலம் பகுதிகளில் ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கி வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது. ஆலத்தூர் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் நடந்தது.
இதில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏதேனும் தேர்தல் குறித்த விதிமீறல்கள், முறைகேடுகள் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவு படுத்தும் நோக்கில் உறுதிமொழிப் படிவத்துடன் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளது என்பது குறித்தும்,
புகார் தெரிவிக்கவேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள், வாட்ஸ் ஆப் எண்கள், ஆண்ட்ராய் அப்ளிகேசன் மற்றும் இ-மெயில் முகவரிகள் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போல அனைத்து வட்டங்களிலும் வட்டாட்சியர்கள் தலைமையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் 100 சதவீதம் நேர்மையுடன் வாக்களிப்பது குறித்த உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.