பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு சட்ட மன்றத் தொகுதிகள் உள்ளன.
இரண்டு தொகுதிகளிலும் மொத்தம் 638 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது வாக்குச்சாவடி அளவிலான விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவின் உறுப்பினர்கள் 100 சதவீத நேர்மையான வாக்குப்பதிவு குறித்து பொது மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள்.
நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டம் 100 சதவீத நேர்மையான வாக்குப்பதிவை எய்திடவேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட நொச்சியம், மேலப்புலியூர், செங்குணம், லாடபுரம், எளம்பலூர் ஆகிய பகுதிகளில் பெரம்பலூர் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பொன்னுதுரை தலைமையில் சம்மந்தப்பட்ட கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி விழிப்புணர்வு குழு உறுப்பினர்கள் நேர்மையான வாக்குப்பதிவு குறித்த உறுதிமொழிப் படிவங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
மேலும், தங்கள் பகுதிகளில் தேர்தல் விதிமுறை மீறல் நடைபெறுவது குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 18004257031 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும்,
கண்ணியமான முறையில் வாக்களிப்பதும், நமது வாக்கை விலைக்கு விற்காமல் நாம் அனைவரும் நேர்மையாக ஜனநாயகக் கடமையினை ஆற்றவேண்டுமென்றும் வட்டாட்சியர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றது.