பெரம்பலூர் : வ.களத்தூர் அருகே உள்ள பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் வெங்கடேசன்(35). இவரது வீட்டின் அருகே உள்ள கூரையிலான மாட்டுப்பட்டியில் நேற்று இரவு இரண்டு பசு மாடுகளை கட்டி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென மாட்டுப்பட்டியில் தீ பிடித்து எரிந்தது. அப்போது ஒரு மாடு, கட்டியிருந்த கயறு அறுத்துக்கொண்டு வெளியே தப்பி வந்தது.
மற்றொரு மாடு உள்ளேயே சிக்கிக்கொண்டதால் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.
தீ பற்றிக் கொண்டு எரிவதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர்.
தீயில் கருகி இறந்த பசுமாட்டின் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வி.களத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விவேக் மற்றும் போலீசார் வந்தனர்.
அப்போது மாட்டுப் பட்டியிக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர் என்றும், அவர்களை கண்டு பிடித்து கைது செய்ய வேண்டும் என்றும் வெங்கடேசன் மற்றும் அவரது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார்வழக்குப் பதிவு செய்து மின்கசிவால் தீ பிடித்ததா அல்லது மர்ம நபர்கள் எவரேனும் தீ வைத்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.