ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பாடத்தை மீண்டும் சேர்க்க கோரி அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம் சார்பில் பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய பசும்பொன்முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஏ.எம் மூர்த்தி தேவர் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பாடத்தை மீண்டும் ஆறாம் வகுப்பு பாடத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த பாடத்திட்டத்தை அகற்றிய தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் விரைந்து அக்கறை காட்டி தேவரின் பாடத்தை இடம்பெறசெய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினரையும் நேசித்தவர் என்றும் அவர் பல்வேறு சமூக மக்களால் போற்றப்படும் சமூக தலைவர் என்றும் புகழாரம் சூட்டினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஏ.எம்.மூர்த்தி, தமிழக மக்களின் நலனுக்காக பாடுபட்ட தேசிய தலைவர் தேவர் பாடத்தை மீண்டும் பள்ளி காபாட புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்றார். மேலும் இந்த போராட்டத்தை தொடர்ந்து வேறு வடிவங்களுக்கு போராட்டம் செல்ல கூடாது என்பதே தங்களின் விருப்பம் என்றும், தமிழக முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் இந்த நடவடிக்கையில் நேரடியாக இறங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதே போன்று மதுரை விமான நிலையத்துக்கு தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தங்களின் போராட்டத்தை தொடர்ந்து நடவடிக்கை எடுக்க அரசு மறுத்தால் தமிழகம் முழுவதும் தங்களின் போராட்டங்கள தொடரும் என ஏ. எம். மூர்த்தி எச்சரிக்கை விடுத்தார். இந்த போராட்டத்தில் திரளான இளைஞர்களுபம்பெண்களும் பெருமளவில் பங்கேற்றனர்.