பெரம்பலூர் : வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் செய்து அதன் பேரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இனங்களில் மனுதாரர் அல்லது மேல்முறையீட்டாளர் சார் ஆட்சியருக்கு மேல்முறையீடு செய்து கொள்ள வழிவகை உள்ளது. மேலும், சார் ஆட்சியர் உத்தரவின் பேரில் மனுதாரர் அல்லது மேல்முறையீட்டாளர் மாவட்ட வருவாய் அலுவலருக்கு இரண்டாவது மேல்முறையீடு செய்து கொள்ளவும் வழிவகை உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் கோட்டத்தில் 35 பட்டா மாறுதலுக்கான மேல் முறையீட்டு மனுக்களும், மாவட்ட வருவாய் அலுவலரிடம் 81 பட்டா மாறுதலுக்கான இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களும் நிலுவையில் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இம்மேல்முறையீட்டு மனுக்களின் பட்டியல் மனுதாரர், எதிர் மனுதாரர், வருவாய் கிராமம் மற்றும் புல எண் ஆகிய விபரங்களோடு பி.டி.எப் PDF முறையில் www.perambalur.tn.nic.in என்ற மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட அலுவலகங்களில் மேல்முறையீடு செய்து, ஆனால் பட்டியலில் விடுப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது சார் ஆட்சியரை நேரில் அணுகி விபரங்களைத் தெரிவிக்கலாம், என இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.