பெரம்பலூர். பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி பேருந்து ஒன்று பிரேக் பிடிக்க முயன்ற போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 65 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்தை அரியலூரை சேர்ந்த திருவேங்கடம் மகன் ராஜாளி ராஜா(50) என்பவர் இன்று காலை சித்தளி, பேரளி, கல்பாடி, அகரம், கிராமங்களில் உள்ள மாணவர்களை ஏற்றிக் கொண்டு பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்ததார்.
பெரம்பலூர் பாலக்கரை அருகே வந்த போது ஓட்டுநர் பிரேக் பிடித்து பேருந்தின் வேகத்தை குறைக்க முயன்றார். கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்தது. முன் சக்கர அச்சு முற்றிலும் உடைந்ததே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 65 மாணவர்கள் காயம் அடைந்தனர். ஓட்டுநர், உதவியாளர் உள்பட அனைவரும் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதில் கல்லூரி மாணவி சரளா என்ற மாணவியின் மார்பு பகுதியில் கண்ணாடி குத்தியதில் படுகாயம் அடைந்துள்ளார். அப்பகுதியே போர்க்களம் போல் காணப்பட்டது. கண்ணாடிகள் சிதறி கிடந்தன. அபயக் குரல் கேட்டதும் அப்பகுதியில் வந்தவர்களும் மீட்பு பணி மற்றும் முதலுதவி அளிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் பெரம்பலூர் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தகவல் அறிந்த பெற்றோர்களும் பதறிபோய் காயமடைந்த குழந்தைகளை காண மருத்துவமனைகளில் குவிந்துள்ளனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். பேருந்தின் ஓட்டுநர் ராஜாளி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிப் பேருந்து முறையாக பராமரிப்பு மேற்கொள்ளாததே காரணம் என தெரிகிறது. ஒரு மாதத்திற்கு முன்னர்தான் இந்த பேருந்தை, கலெக்டர், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் சான்றும் வழங்கி உள்ளனர்.
இதில் முறையாக ஆய்வு செய்யாத கலெக்டர், மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.