பெரம்பலூர் : அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் வா. அண்ணாமலை வெளியிட்டயிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் வரும் 8 ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 2011 சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்ததற்கு ஏற்ப தமிழக அரசு தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நீக்கி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஊதிய நிர்ணயத்தில் மாற்றம் செய்ய வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு விதமான ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். தாய்மொழி பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணையை திருத்தம் செய்து, தமிழ்ப் பாடத்தை முதல் பாடமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ சார்பில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைமையிடங்களில் கவன ஈர்ப்பு பேரணியும், ஏப். 19 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், ஆக. 1 ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்த போராட்டங்களுக்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கோரிக்கைகளை வலியுறுத்தி அக். 8 ஆம் தேதி அனைத்து ஆசிரியர்களும், ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென ஜாக்டோ உயர்நிலை குழு முடிவு செய்துள்ளது.
இதன்படி, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அனைத்து நிலை ஆசிரியர்களும், பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.