பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பள்ளி மாணவர்களை பட்டா மாற்றம் செய்ய தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெரம்பலூர் கலெக்டர் (பொ) மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் கலெக்டர் (பொ) மதுசூதன்ரெட்டி இன்று காலை பெரம்பலூர் தாலுகா ஆபீசுக்கு ஆய்வுக்காக சென்றிருந்ததாக தெரிகிறது.
அப்போது தாலுகா அலுவலக பொது தகவல் மையத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் பள்ளிசீருடையில் ஆவணங்களுடன் வரிசையில் காத்திருந்தினர்.
இதை கண்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மாணவர்களிடம் விசாரித்தபோது பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜாக்கண்ணு (54), என்பவர் அவரது நிலத்துக்கான பட்டா மாற்றம் செய்வதற்கான ஆவணங்களை தங்களிடம் கொடுத்து பொது தகவல் மையத்தில் வழங்கி ரசீதுடன் வருமாறு தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் இது குறித்து விசாரித்தபோது பள்ளி நேரத்தின்போது ஆசிரியர் ராஜாக்கண்ணு, மாணவர்களை பட்டா மாற்றம் செய்ய அனுப்பியது தெரியவந்தது.
இதனையடுத்து ஆசிரியர் ராஜாக்கண்ணு மீது உரிய நடவடிக்கை எடுக்க கல்வி துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.