பாடாலுர் பால் பண்ணையின் கட்டுமான பணி ஜீன் மாதத்திற்குள் நிறைடையும் :பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையரும், ஆவின் நிர்வாக இயக்குநருமான சுனில் பாலிவல் தகவல்
பெரம்பலூர் ; பெரம்பலூர் மாவட்டம், பாடாலுரில் கட்டப்பட்டு வரும் புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகள் குறித்து பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையரும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் நிர்வாக இயக்குநருமான சுனில் பாலிவால் இன்று நேரில் பணிகளை பார்வையிட்டார்.
கட்டுமானத்தின் வரைபடத்தினை பார்த்து என்னென்ன பகுதிகள் பால்பண்ணையில் இடம் பெறுகின்றன என்று பொறியாளர்களிடம் கேட்டறிந்த ஆணையர் மின்சாரம், குடிநீர் இணைப்புகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவர்களிடமும் விரிவாக கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தினை தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றமடையச்செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் கிராமத்தில், சுமார; 22 ஏக்கர் நிலப்பரப்பளவில், நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட 36 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பால் பண்ணை கட்டடத்திற்கு (15.7.2015) அன்று தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்கள். அதனைத் தொடர்ந்து பால்பண்ணையின் கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 179 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களில் மொத்தம் 17,581 உறுப்பினர்கள் பால் உற்பத்தியாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு இங்கு அமையவுள்ள புதிய பால் பண்ணை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றது. குறித்த காலத்திற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு விடும். 2016 ஜீன் மாதத்திற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும் அளவிற்கு திட்டமிட்டு இரவு, பகலாக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது சார் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, ஆவின் பொது மேலாளர்கள் லோகிதாஸ் (சென்னை), தனசேகரன் (திருச்சி), துணைப் பொதுமேலாளர் காமராஜ், நிர்வாகக்குழு உறுப்பினர் நல்லுசாமி, ஆவின் மேலாளர் அன்பழகன், பாடாலூர் ஊராட்சி மன்றத் தலைவர் வேல்முருகன், விரிவிவாக்க அலுவலர் அம்பேத்கர் உள்ளிட்ட அலுவலர்கள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க செயலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.