பாதுகாப்பின்றி இயக்கப்படும் கல்குவாரிகளை மூடக்கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பொதுமக்களின் உயிருக்கும், குடியிருப்புகளுக்கும் பாதுகாப்பின்றி இயக்கப்பட்டு வரும் கல் குவாரிகளை மூட கிராம மக்கள் வலியுறுத்தல் .
ஆட்சியரை சந்திக்க கிராம மக்களை அனுமதிக்காததால் ஆத்திரமுற்ற மக்கள் ஆட்சியரின் கார் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.
பெரம்பலூர் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி ஒன்று நீண்ட நாட்களாக இயங்கி வருகிறது. கிராமத்தை ஒட்டியுள்ள இந்த கருங்கல் குவாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக சக்தி வாய்ந்த வெடிமருந்து தோட்டாக்களை வைத்து பாறைகளை தகர்ப்பதால் கிராமத்திற்குள் வந்து கருங்கல் பாறைகள் விழுவதுடன் பலத்த சத்தத்துடன் வெடிக்கும் தோட்டாக்களால் நில அதிர்வு ஏற்பட்டு குடியிருப்பு வீடுகள் சேதமடைவதாக நீண்ட நாட்களாக புகார் எழுந்து வந்தது.
இந்நிலையில் நேற்று அந்த குவாரியில் பலம் வாய்ந்த தோட்டா வெடித்ததில் கிராம மக்கள் 4 பேர் காயமுற்றதோடு , 15 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன இதனால் நேற்று கிராம மக்கள் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று கவுல்பாளையம் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சிரை சந்தித்து சம்மந்தபட்ட குவாரி மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுக்க வந்தனர். ஆனால் பொது மக்கள் சார்பாக ஊராட்சித் தலைவரை மட்டும் ஆட்சியரை சந்திக்க அனுமதித்த அதிகாரிகள் பொதுமக்களுக்கு அனுமதி மறுத்ததால் ஆத்திரமுற்ற கிராம மக்கள் ஆட்சியரின் கார் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகளின் சமரச பேச்சுக்குப்பின்னர் கலைந்து சென்றனர். தர்ணாவில் ஈடுபட்ட கிராம மக்கள் கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக தேசிய நேடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளர்.