பெரம்பலூர் : பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான கல்லூரிகளுக்கிடையே (Inter Collegiate Sports & Tournament -2015-16) பெண்களுக்கான கபடிப் போட்டி செப். 22 மற்றும் செப்.23 ம்தேதிகளில் பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்க உறுப்புக் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது.
இப்போட்டியில் பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவுப்பெற்ற 33 கல்லூரிகளிலிருந்து 400 மாணவியர்கள் கலந்துகொண்டனர். 14 நடுவர்கள் பங்குபெற்று நடுநிலைமையோடு போட்டிகளை நடத்திக்கொடுத்தனர்.
23-09-2015ஆம் நாளன்று நடைபெற்ற இறுதிப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது துவக்கி வைத்துப் போட்டிகளைப் பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:
பெண்கள் அனைத்துத்துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக சாதனைகளைப் படைத்து வரும் காலம் இது. குறிப்பாக விளையாட்டுத் துறையில் ஏராளமான பெண் வீராங்கனைகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உலகநாடுகளில் உள்ள வீராங்கணைகளோடு போட்டியிட்டு வெற்றி பெற்று நம் தாய்த் திருநாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள். அந்த வகையில் நீங்களும் எதிர்காலத்தில் உங்களுக்கு ஆர்வமிக்க விளையாட்டுத் துறையில் அளப்பரிய சாதனைகளைப்படைத்து நம் நாட்டிற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும், என பேசினார்.
இப்போட்டியில் ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புப் பெண்கள் கல்லூரி மாணவிகள் முதல்பரிசையும், புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவிகள் இரண்டாவது பரிசையும், திருச்சிராப்பள்ளி காவேரி மகளிர் கல்லூரி மாணவிகள் மூன்றாவது பரிசையும், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரி மாணவிகள் நான்காவது பரிசையும் பெறறனர். அதனைத் தொடர்ந்து வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பெரம்பலூர் நடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா பரிசுக்கோப்பைகளை வழங்கிப் பாராட்டினார;.
இந்நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் மற்றும் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரிப் பேராசிரியர் முனைவர் அறிவுடைநம்பி சிறப்பு விருந்தினாராக கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினார். மேலும் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராசாராமன், பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வி செயலாளர் முனைவர் பழனிச்சாமி, குரும்பலூர் கல்லூரியின் உடற்கல்வி பயிற்றுனர் எஸ்.பாலசுப்ரமணியன் மற்றும் கல்லூரிப்பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.