பெரம்பலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் இன்று காலை பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதை தொடர்ந்து பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சியாளர் பயிற்சி முகாம் நடந்தது.
முகாமிற்கு மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். தேசிய செயலாளர் எச். ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அகில இந்திய பொது செயலாளர் முரளிதரராவ் முகாமினை தொடங்கி வைத்து பேசுகையில், தமிழகத்தில் 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களை கட்சி தொண்டர்களாக மாற்றுவது, நாட்டு மக்களுக்காக பணி செய்வது, இன்றைய அரசியல் சூழ்நிலையில் பாரதிய ஜனதா ஓர் முக்கிய இடத்தில் உள்ளது. மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடத்தில் கட்சி தொண்டர்கள் கொண்டுசெல்லவேண்டும், தொண்டர்கள் கட்சி பணியோடு சேர்த்து மக்கள் பணியாற்றவேண்டும். இதன் மூலம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரதிய ஜனதா கட்சி வலிமைப்பெறும். அப்போது தேசிய ஒற்றுமை, தேசிய வளர்ச்சி, தேசிய முன்னேற்றம் ஏற்படும் என்றார்.
பின்னர் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறுகையில், பாரதிய ஜனதா கட்சியில் 50 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாமில் 166 பேர் கலந்துகொண்டுள்ளனர். இவர்களுக்கு கட்சியின் வரலாறு,கொள்கை, தொண்டர்களுடோடு பழகுதல், சகோதர கட்சிகள் நாட்டு முன்னேற்றத்திற்கும், மக்கள் முன்னேற்றத்திற்கும் எப்படி செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பது குறித்தும்,
மத்திய அரசின் சாதனைகள் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது, அரசியல் கட்சியில் செயல்பாடு, தேர்தல் பணி போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் தமிழகத்தில் மண்டல அளவில் 600 பயிற்சி முகாமினை மேற்கொள்ளவுள்ளனர். இதில் 60 ஆயிரம் பேர் பயற்சி பெறவுள்ளனர். இது ஒரு மிகப்பெரிய திட்டம், தொண்டர் மற்றும் மக்கள் நலன் காக்கவேண்டும். அரசின் சாதனையை மக்களிடத்தில் எடுத்துரைக்கவுள்ளனர். மக்கள் நலன் காக்கும் திட்டம், பாரதிய ஜனதா கட்சி ஒரு மாறுப்பட்ட கட்சி என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்றார்.
மாநில அமைப்பு செயலாளர்கள் மோகன்ராஜூலு, மாநில அமைப்பு இணை பொதுசெயலாளர் கேசவவிநாயகம், தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் மாநில துணைதலைவர்கள் சுப்ரமணியன், வானதி சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.