பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அருகே உள்ள பாலையூரில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் 20 அடி நீள அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் ஸ்ரீ அருள் சத்தி மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டும் தேர்திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சொதல் விழாவுடன் தொடங்கியது. கடந்த 26 ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் சிங்க வாகனம்இ குதிரை வாகனம், யானை வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருவீதி உலா கரகாட்டம் மற்றும் வாண வேடிக்கையடன் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 20 அடி நீளம் கொண்ட அலகு, தேர்பவனி அலகு, பக்க அலகு, நாக்கு அலகு குத்தியும், பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பொங்கல் – மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றது.
இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. அப்போது பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் கோவிலில் நிலை நிறுத்தப்பட்டது.
இவ்விழாவில் பாலையூர், மற்றும் சுற்றுபுற கிராமங்களான வேப்பந்தட்டை, அனுக்கூர், எசனை, அன்னமங்கலம், தொணடப்பாடி, நெய்க்குப்பை, வெண்பாவூர், வடகரை, ஊர்களில் இருந்து பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்..