பால் உற்பத்தியாளர்களுக்கு 2016 ஆம் ஆண்டில் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 35, எருமைப் பாலுக்கு ரூ. 45ம் உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலர் கே. முகமது அலி கோரிக்கை விடுத்துள்ளார்.
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் வழங்குவது போல, இதர மாவட்டங்களிலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக, பெரம்பலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி, சின்ன வெங்காயம், மக்காசோளத்துக்கு தமிழக அரசு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பால் முழுவதையும் ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்ய வேண்டும். தமிழக அரசின் குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தில், ஆவின் பாலை சேர்த்து வழங்கினால் பால் விற்பனையை விரிவுப்படுத்த முடியும். ஆவின் பாலுக்கும், பால் பொருள்களுக்கும் நுகர்வோரிடம் உள்ள வரவேற்பை பயன்படுத்தி, அதன் விற்பனையை அதிகரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கால்நடைத் தீவனங்கள் வழங்க வேண்டும்.
பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவும், சங்கப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரமும், சம்பவள உயர்வும் வழங்க வேண்டும். கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகளை தடையின்றி வழங்க வேண்டும். மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன. 5 ஆம் தேதி கோட்டை எதிரே நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் 27 ஆம் தேதி நடைறும் என்றும் தெரிவித்தார்.
பேட்டியின்போது, மாநிலத் தலைவர் ஏ.எம். முனுசாமி, துணைத் தலைவர்கள் எம். ஆறுமுகம், பி. ரெத்தினம், செயலர்கள் ராமநாதன், செ. முத்துப்பாண்டி, என். செல்லதுரை வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் ரூ. 36.28 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பால் பண்ணைக்கான கட்டுமானப் பணிகளை கட்சியினருடன் சென்று, தமிழ்நாடு பால் உற்பத்தயாளர்கள் சங்க பொதுச்செயலர் கே. முகமது அலி பார்வையிட்டார்