பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம் எறையூரில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலம் சுமார் 290 ஏக்கர் உள்ளது.
இந்த நிலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜவுளி பூங்கா அமைப்பதற்கு திட்டமிட்டு அரசு கையகப்படுத்தியது.
இந்நிலையில் இந்த நிலத்தை கடந்த சில வருடங்களாக பயன்படுத்தி வந்த அந்த பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இனத்தை மக்கள் பலர் இணைந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என கூறி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் அந்த நிலத்தை நேற்று சிலர் டிராக்டரை கொண்டு உழவு செய்வதாக வருவாய் துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து,
வேப்பந்தட்டை தாசில்தார் தமிழ்செல்வன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உழவு செய்பவர்களை தடுத்து வழக்கு விசாரணையில் உள்ள போது நிலத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது எனவும்,
அவ்வாறு பயன்படுத்தினால் உழவு செய்யும் டிராக்டரை பறிமுதல் செய்து உரியவர் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தாசில்தார் தெரிவித்தார்.
அதன் பிறகு நிலத்தை உழவு செய்தவர்கள் பாதியிலேயே விட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.