பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் உலகநன்மைக்காக 63 நாயன்மார்களுக்கு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே எளம்பலூரில் பிரம்மரிஷி மலைச்சாரலில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகாசித்தர்கள் அறக்கட்டளை சார்பில் உலக மக்கள் நலன்கருதியும், ஜீவகாருண்ய சிந்தனை ஓங்கிடவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும், ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் தொடங்கி புரட்டாசி மாதம் வரை 51 நாட்களுக்கு தொடர்ந்து கோமாதா பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
இன்று திருவாரூர் தியாகேசர் கோவிலில் இருந்து நடராஜர், சிவகாமி அம்பாள், நந்திகேஸ்வரர் மற்றும் 63 நாயன்மார்கள் வெண்கல சிலைகள் எளம்பலூர் பிரம்மரிஷி மலைஅடிவாரத்திற்கு எடுத்துவரப்பட்டு காகன்னை ஈஸ்வரர் சன்னதியில் வைத்து உலக நன்மைக்காக சிறப்பு அபிசேகங்களும் மகாதீப ஆராதனையும் நடந்தது.
முன்னதாக 210 சித்தர்கள் யாகமும், கோபூஜை, கஜ பூஜையும் நடந்தது. பூஜைகளை அன்னைசித்தர் ராஜ்குமார் தலைமை வகித்து நடத்திவைத்தார்.
இதில் திருவாரூர் கலாநிதி, கோவை பேரூர் ஆதினத்தை சேர்ந்த சுரேஷ்பாபு, கிராம வளர்ச்சி நிறுவன தலைவர் சுபிக்சா சுவாமிநாதன், முத்து, வழக்கறிஞர் சீனிவாசமூர்த்தி, பிரம்மரிஷி மலை ஆசிரம நிர்வாகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் மற்றும் திரளான பெண்கள், பள்ளி சிறுவர் ,சிறுமியர்கள் கலந்துகொண்டனர்.
முடிவில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானமும், பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருட்களும் வழங்கப்பட்டன.