சென்னை: புதிய பாஸ் வழங்கும் வரை மாணவ, மாணவியர் பழைய பாஸை பயன்படுத்தி அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் டூ வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு மாநில அரசு ஆண்டுதோறும் இலவச பஸ் பாஸ் வழங்கி வருகின்றது.
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறந்த 2 வார காலத்தில் பஸ் பாஸ் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பாஸ்களை பயன்படுத்தலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறுகையில், மாணவ, மாணவியருக்கு விரைந்து பஸ் பாஸ் வழங்க போக்குவரத்து கழக அதிகாரிகள் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
மாணவ, மாணவியரின் விவரங்கள் புகைப்படங்கள், கிடைத்தவுடன் புதிய பஸ் பாஸ் வழங்கப்படும். புதிய பாஸ் வழங்கும் வரை பழைய பாஸிலேயே மாணவ, மாணவியர் பேருந்தில் பயணம் செய்ய அனுமதி அளிக்குமாறு டிரைவர், கண்டக்டர்களிடம் வாய்மொழி உத்தரவு தெரிவித்துள்ளோம்.
மாணவ, மாணவியரிடம் கட்டணச்சீட்டுக்கான பணத்தை வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
கடந்த ஆண்டு 30 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்