பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக்களும் “டெங்கு காய்ச்சல்” விழிப்புணர்வு குறித்த சிறப்புக் கூட்டம் இன்றும் நாளையும் இரு நாட்களில் அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடீஸ் கொசுக்கள் உருவாகும் இடங்களான பழைய டயர்கள், தேங்காய் மூடிகள் (சிரட்டைகள்), நீண்ட நாட்களாக தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் திறந்த நிலை தொட்டிகள், குடிநீர் குழாயின் கீழ் தேங்கியிருக்கும் சிறு குட்டை தண்ணீர், உரல், குளிர்சாதனப் பெட்டிகளின் பின்புறம் தேங்கியிருக்கும் நீர் உள்ளிட்டவற்றிலிருந்து கொசுக்கள் பரவுவதை எவ்வாறு தடுப்பது குறித்தும், பகலில் கடிக்கும் கொசுக்களின் மூலமும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது, எனவே ஒவ்வொரு ஊராட்சியில் இதுபோன்ற சுகாதாரமற்ற இடங்களை சுத்தம் செய்யவும், சுற்றுப்புற சூழலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும், டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கவும், கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு, சுய உதவிக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும், அனைத்து கிராம மக்களிடையே விழிப்புணா;வு ஏற்படுத்தி முழு வீச்சில் செயல்பட நடவடிக்கை எடுத்து டெங்கு இல்லாத கிராம ஊராட்சியை உறுதி செய்தல் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
எனவே சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களும், பொதுமக்களும் திரளான அளவில் கலந்து கொண்டு டெங்கு தொடர்பான தேவையான தகவல்களை அறிந்து கொண்டு, நலவாழ்வு பெற அனைத்து மக்களும் முன் வர வேண்டும், என அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.